Thursday 20 March 2014

அருளின் அற்புதங்கள் தொடர் 
எழுதியவர்-
வேதாந்தகவியோகி  நாகசுந்தரம்
பாகம் : 7

சென்ற 1987 ல் சென்னை அயனாவரத்தில் எங்கள் குடும்பமும் எனது தாத்தா (தாயாரின் தந்தை) குடும்பமும் சேர்ந்து  வாழ்ந்து வந்தோம். அச்சமயம் எனது தாத்தாவுக்கு பீமரத சாந்தி செய்வதாகவும் அதற்கு சண்டி ஹோமம் செய்யலாமென்றும் முடிவானது. அதன்படி அப்பாதான் அதற்கு வேண்டிய ஸகல ஏற்பாடும், ஏன் பூஜா கல்பம் முதல்கொண்டு தயாரித்தார்கள். ஏனெனில்  அதற்குமுன் எனதுதாத்தாவும் சரி, அப்பாவும் சரி தனியாக தங்கள் சொந்த செலவில் - ஏற்பாட்டில் அதுவரை சண்டிஹோமம் செய்ததில்லை. இரண்டு நாட்கள் காரியக்ரமத்தில் ஒரு கல்யாண மண்டபத்தில் ஏற்பாடானது. முதல்நாள் கடஸ்தா பனமும், பூஜையும், மறுநாள் காலை சண்டிஹோமமுமாக நடந்தது. அன்று மதியம் ஹோமம் பூஜைக்குப்பின் ஸமாராதனை நடந்தது. அதுசமயம்தான்  தேவியின் கருணாற்புதம் காணக்கிடைத்தது. அதாவது அப்பாவும் என் அம்மாவும் சாப்பாட்டுபந்தியை கவனித்தார்கள். முதல் இலையில் ஒரு பெண், (அவள் இவர்களுக்கு முன்பே தெரிந்த  வீட்டுவேலை செய்யும் பெண்தான்) கருமைநிறம்,  மணமானவள் சாப்பிடுவதை கண்டார்கள். அவளை அங்கு யாரும் உட்காரச் சொல்லியிருக்க நியாயமேயில்லை. ஏனென்றால் முதல் சாப்பாட்டுப்பந்தி ஹோமம் செய்த ரித்விக்குகளுக்கும், அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கும் என்பது ஒரு ஸம்ப்ரதாயமல்லாவா!  அந்த நிலையில் தூரத்தே நின்று பார்த்த இவர்களுக்கு அவள் ஒரு வேலைக்காரப் பெண்ணாகத் தெரியவில்லை. ஸாக்ஷாத் சண்டிகா பரமேச்வரியாகவே தான் தெரிந்தாள்.

                அப்பாவின்  பண்பட்ட உபாஸனை மற்றும் அவர் தன் குருவின்மீது கொண்டுள்ள அபரிமிதமான பக்தியினாலும்என் அம்மாவின் கருணா விலாஸத்தாலும்  (அம்மா அம்பாளின் அவதாரம் என்று அவளின் மறைவிற்குப்பின் வெளியான விஷயம்- இதுபற்றி புவனாவின்பரணி என்ற தலைப்பில் 2002ல் வெளியானது) (இப்போது நமது இணயதளத்தில் pdf வடிவில் உள்ளது.) அவர்கள் அம்பாளை ப்ரத்யக்ஷமாக கண்முன்னே கண்டிருக்கி றார்கள். இதனை அவர்கள் யாருக்கும் சொல்லவுமில்லை. பூஜை முடிந்து வீட்;டுக்கு வந்தபின்தான் அனைவரிடமும் சொன்னார்களாம்


பாகம் : 8

இதுவும் சண்டியாகம் பற்றியதே! அடுத்துவந்த 1990 ம்ஆண்டு அயனாவரத்தில் நாங்கள் தனியாக என் சொல்ப வருமானத்தில் வாழ்க்கை சக்கரம் உருண்டது. எங்கள் உபாஸனா வாழ்க்கையில் பிரதி பர்வாவிலும் எப்படியோ நவாவரணபூஜை கண்டிப்பாக உண்டு. அந்த ஆண்டு நவராத்திரி பூஜை வழக்கம்போல் ஏற்பாடாகி நடந்துவந்தது. நவமி அன்று சண்டி ஹோமம் நடக்கவேண்டும். நாங்கள் குடியிருந்த வீட்டில் மொட்டைமாடியில் எங்கள் முயற்சியில் படுதாகட்டி, அதனடியில் குண்டம் எல்லாம் தயாராகிவிட்டது. கீழே குடியிருக்கும் பகுதியிலும் ஹோமகுண்டம் அமைக்க இடமில்லை. அதுவோ மற்றவர் வீடு. நாங்கள் வாடகை க்கு குடியிருக்கிறோம். மாலை 4 மணிக்கு சண்டி ஹோமம் செய்வதாக எண்ணம். மதியம் 12 மணிக்குள்ளாகவே எல்லா சாமான்களும், நைவேத்யம் உள்பட அனைத்தும் தயாராகிவிட்டது. ஆனால் சுமார் 2 மணிக்கு வானம் இருண்டு கொண்டு மழைக்கான அறிகுறி ஆரம்பமாகிவிட்டது. எங்களுக்கு மிகுந்த பயமாகிவிட்டது. ஆனால் அப்பாவும் அம்மாவும் இதுபற்றிய கவலை எதுவும்  இல்லாதவர்களாவே தோன்றியது. நான் மொட்டை மாடியில்; சென்று அமர்ந்து ஜபம் செய்துகொண்டிருந்தேன். மழை எந்த நிமிடமும் கொட்டி தீர்க்க தயாராக இருந்தது. இன்னிலையில் மாலை மணி 4 ஆகிவிட்டது. சாமான்கள் பூராவும் மாடியில் கொண்டு வைத்து ஹோமத்துக்கான ஏற்பாடுகள் தயாராகி தொடர்ந்து ஹோமமும் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு பூர்ணாஹூதி நடபெற்று பூர்த்தியானது. பின்பு மழையே வரவில்லை. மறுநாள் அதிகாலை  3 மணிக்கு மேல் நவமியில் வாஞ்சாகல்பலதா என்கிற ஹோமமும் தொடங்கி 6 மணிக்கு பூர்த்தியானது. பூர்த்தியான அடுத்த விநாடி வானம் இருண்டது. மழை 'சோ' என கொட்டத் தொடங்கிவிட்டது. பார்த்தீர்களா! குருக்ருபைக்கும் தீர்மானமான எண்ணத்திற்கும் பஞ்ச பூதங்களே துணை செய்கின்றன என்பதை என் சிறுவயதிலேயே தெரிந்து கொண்டேன்.


தொடரும் அற்புதங்கள் :.......

No comments:

Post a Comment